கணினியின் உயிர்நாடி பணிசெயல் முறைமை (Operating System)

பணிசெயல் முறைமை (Operating System) பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கணினி மற்றும் ஸ்மார்ட்போன்கள் நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஆனால், ஒரு கணினியை ON செய்தவுடன் அது எவ்வாறு இயங்கத் தொடங்குகிறது? நாம் கொடுக்கும் கட்டளைகளை வன்பொருள்கள் (Hardware) எவ்வாறு புரிந்து கொள்கின்றன?

இந்த செயற்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான மென்பொருளே பணிசெயல் முறைமை (Operating System – OS) ஆகும்.

பணிசெயல் முறைமை என்றால் என்ன, அதன் முக்கிய பணிகள் மற்றும் அது ஏன் ஒரு கணினிக்கு அவசியம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

பணிசெயல் முறைமை (Operating System) என்றால் என்ன?

பணிசெயல் முறைமை என்பது ஒரு கணினியைப் பயன்படுத்திப் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மிக அடிப்படையான மென்பொருளாகும். இது கணினியின் வன்பொருள்களுக்கும் (Hardware), பயனர் (User) அல்லது ஏனைய மென்பொருள்களுக்கும் (Software) இடையே ஒரு இடைத்தரகராக அல்லது பாலமாகச் செயல்படுகிறது.

எளிமையாகச் சொன்னால், உங்கள் கணினியில் உள்ள சுட்டி, சாவிப்பலகை, தெரிவிப்பி, நினைவகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நீங்கள் விரும்பும் வேலையைச் செய்ய வைக்கும் பிரதான மென்பொருள் தான் இந்த OS.

பணிசெயல் முறைமையின் பிரதான பணிகள் (Functions of OS)

ஒரு கணினி முறைமையில் பணிசெயல் முறைமை பல முக்கியமான பணிகளைப் பின்னணியில் நின்று மேற்கொள்கிறது. அவை பின்வருமாறு:

1. பயனர் இடைமுகத்தை வழங்குதல் (Providing User Interface)

பயனர்(Computer User) கணினியுடன் மிக எளிதாகத் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற ஒரு பயனர் இடைமுகத்தை (User Interface) இது வழங்குகின்றது. நாம் திரையில் பார்க்கும் ஐகான்கள் (Icons), மெனுக்கள் மற்றும் விண்டோக்கள் அனைத்தும் பணிசெயல் முறைமையின் மூலமே சாத்தியமாகின்றன.

2. வன்பொருள்களைக் கட்டுப்படுத்துதல் (Hardware Management)

கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள மைய முறைவழி அலகு (CPU), உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைத் தொழிற்படச் செய்வதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் இதன் பணியாகும்.

3. நினைவக மேலாண்மை (Memory Management)

கணினியின் நினைவகத்தை (Memory) உகந்தவாறு கையாள்வது பணிசெயல் முறைமையாகும். எந்த ஒரு மென்பொருள் இயங்க வேண்டும் என்றாலும், அதற்குத் தேவையான நினைவக இட ஒதுக்கீட்டை இதுவே செய்கிறது.

4. கோப்பு மேலாண்மை (File Management)

கணினியில் நாம் சேமிக்கும் கோப்புகள் (Files) மற்றும் கோப்புறைகளை (Folders) ஒழுங்குமுறையாகப் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உரிய பணிகளை இது செய்கின்றது.

5. பாதுகாப்பு மேலாண்மை (Security Management)

பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கணினியில் உள்ள தரவுகளுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

6. தேக்ககச் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் (Storage Device Management)

வன்வட்டு (Hard Disk) போன்ற தேக்ககச் சாதனங்களின் செயல்பாடுகளை இது கண்காணித்து முறைப்படுத்துகிறது.

பல்வேறு வகைப் பணிசெயல் முறைமைகள்

கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் வெவ்வேறு விதமான பணிசெயல் முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன:

  • கணினிகளுக்கானவை:
    மைக்ரோசொஃப்ற் வின்டோஸ் (Windows), அப்பிள் மக்கின்ரொஷ் (Mac OS), மற்றும் லினக்ஸ் (Linux – Ubuntu, Fedora).
  • ஸ்மார்ட்போன்களுக்கானவை:
    அன்ட்றொயிட் (Android), iOS (iPhone/iPad), பிளாக்பெரி OS மற்றும் வின்டோஸ் மொபைல் OS.

ஏன் பணிசெயல் முறைமை இல்லாமல் கணினி இயங்காது?

பணிசெயல் முறைமை இல்லாத ஒரு கணினி வெறும் உலோகப் பெட்டிக்குச் சமம். நாம் மவுஸை அசைக்கும்போது அல்லது கீபோர்டில் டைப் செய்யும்போது, அந்தத் தகவல் மின் சமிக்ஞைகளாக கணினிக்குச் செல்கிறது.
அந்தச் சமிக்ஞைகளைச் சரியான மென்பொருளுக்குக் கடத்தி, அதன் முடிவைத் திரையில் காட்டுவதற்கு OS அத்தியாவசியமானது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *