கணினியின் முக்கிய பகுதிகள்

கணினியின் முக்கிய பகுதிகள்
கணினியின் முக்கிய பகுதிகள்

கணினியின் முக்கிய பகுதிகள்

இன்றைய நவீன உலகில் கணினியானது மனிதனின் அத்தியாவசியமான ஒரு கருவியாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், வணிகம், நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகளிலும் கணினியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கணினியானது தமது பணிகளை சரியாக செய்வதற்கு அதன் பல்வேறு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதே காரணமாகும். இப்பதிவில் கணினியின் முக்கிய பகுதிகள் பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.

கணினி என்பது தனிப்பட்ட ஒரு சாதனம் அல்ல. பல்வேறு பகுதிகள் ஒன்றாக இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு (System) ஆகும். கணினியின் முக்கிய பகுதிகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

1. வன்பொருள்(Hardware)

2. மென்பொருள் (Software)

இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடன் செயற்படும்போது மட்டுமே கணினி முழுமையாக இயங்கும்.

வன்பொருள் (Hardware)

கணினியில் தொட்டுணரக்கூடிய அனைத்து பகுதிகளும் வன்பொருள்(Hardware) என அழைக்கப்படுகின்றன. கணினியின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் உள்ள அனைத்து சாதனங்களும் வன்பொருள் பகுதிகளே.

பொதுவாக வன்பொருள் பகுதிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

• உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices)

• முறைவழியாக்க சாதனம் (Processing Device)

• வெளியீட்டு சாதனங்கள் (Output Devices)

• சேமிப்பு சாதனங்கள் (Storage Devices)

உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices)

பயனர்(கணினியைப் பயன்படுத்துபவர்) கணினிக்கு தரவை வழங்க/ உள்ளிட பயன்படுத்தும் சாதனங்கள் உள்ளீட்டு சாதனங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக சாவிப்பலகை, சுட்டி போன்றன உள்ளீட்டு சாதனங்கள் ஆகும்.

1. சாவிப்பலகை (Keyboard)

சாவிப்பலகை என்பது கணினியில் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் மற்றும் கட்டளைகளை உள்ளிட பயன்படும் முக்கிய உள்ளீட்டு சாதனம் ஆகும்.

ஒவ்வொரு சாவியும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைக் மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் Unicode விசைப்பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

2. சுட்டி (Mouse)

சுட்டி என்பது திரையில் காணப்படும் நிலைகாட்டியை(Pointer) நகர்த்தவும், தேவையானவற்றை தெரிவு செய்யவும் பயன்படும் உள்ளீட்டு சாதனமாகும்.

சொடக்குதல்(Click), இரு முறை சொடக்குதல் (Double Click), Drag போன்ற செயல்களை செய்யவும் இது பயன்படுகிறது.

3. வருடி (Scanner)

ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை இலத்தினியல்(Digital) வடிவமாக மாற்ற வருடி பயன்படுகிறது.

4. நுணுக்குப்பண்ணி (Microphone)

ஒலியை கணினிக்குள் உள்ளிட பயன்படும் சாதனம் இதுவாகும். Online classes, voice recording போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

முறைவழிப்படுத்தும் சாதனம் (Processing Device)

கணினியில் தரவுகளை முறைவழியாக்கம் செய்ய பயன்படும் இவ்வலகு மைய முறைவழி அலகு ((Central Processing Unit – CPU) என அழைக்கப்படும்.

CPU என்பது கணினியின் மூளை என அழைக்கப்படுகிறது. கணினியில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் CPU கட்டுப்படுத்துகிறது.

CPU-வின் முக்கிய பகுதிகள்:

1.     எண்கணித மற்றும் தர்க்க அலகு – ALU (Arithmetic Logic Unit)

2.     கட்டுப்பாட்டு அலகு – Control Unit (CU)

3.     நினைவகப் பதிவகங்கள் – Memory Registers

ALU எண்கணித மற்றும் தர்க்க செயல்களை செய்கிறது.

Control Unit கணினியின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்துகிறது.

Memory Registers மிக வேகமாக செயல்படும் தற்காலிக நினைவகமாகும்.

வெளியீட்டு சாதனங்கள் (Output Devices)

கணினியில் முறைவழிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுகின்ற அல்லது பயனருக்கு காண்பிக்கின்ற சாதனங்கள் வெளியீட்டு சாதனங்கள் எனப்படும். அவை பின்வருமாறு

1. தெரிவிப்பி (Monitor)

கணினியின் திரை ஆகும். செயலாக்கப்பட்ட தகவல்கள் படமாகவும் எழுத்தாகவும் காண்பிக்கப்படுகின்றன.

2. அச்சுப்பொறி (Printer)

மென்பிரதி(Soft copy)யாக உள்ள தகவல்களை காகித வடிவில் பெற பயன்படுத்தப்படும் சாதனம் அச்சுப்பொறி என அழைக்கப்படும்.

3. ஒலிபெருக்கி (Speaker)

ஒலியை வெளியிட பயன்படும் சாதனம் ஒலிபெருக்கி ஆகும்.

சேமிப்பு சாதனங்கள் (Storage Devices)

தகவல்களை நிரந்தரமாக சேமிக்க பயன்படும் சாதனங்கள் சேமிப்பு சாதனங்கள் ஆகும். இது இரு வகைப்படும்.

1.    முதன்மை தேக்ககம் (Primary Storage)

i.    Random Access Memory (RAM)

ii.  Read Only Memory (ROM)

2.     துணைத் தேக்ககம் (Secondary Storage)

i. Hard Disk

ii. Pen Drive

iii. Memory Card

2. மென்பொருள்(Software)

கணினியின் செயல்பாட்டை இயக்கும் கணினிச் செய்நிரல்கள் மென்பொருள்எனப்படும்.

இதனை கைகளால் தொட்டு, உணர முடியாது. அதுபோல வெறுமனே வன்பொருள்கள் மட்டும் இருந்தால் கணினி இயங்காது.

கணினியை சரியாக இயக்கி எமது தேவைகளை நிறைவேற்ற மென்பொருள்கள் இன்றியமையாதவை. மென்பொருள்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

மென்பொருள் வகைகள்:

1. முறைமை மென்பொருள் (System Software)

2. பிரயோக மென்பொருள் – (Application Software)

முறைமை மென்பொருள் கணினியின் அடிப்படை செயல்பாட்டை நிர்வகிக்கும் அதேவேளை பிரயோக மென்பொருள்  பயனர் தேவைகளுக்காக பயன்படுகிறது.

அதாவது windows எனப்படும் இயக்க முறைமை இல்லையெனில் விரிதாள்(Excel), வரைவியல்(Paint) போன்ற பிரயோக மென்பொருள்களைக் கணினியில் நிறுவ முடியாது.

கணினியின் அனைத்து பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் தான் கணினி சரியாக இயங்வதுடன் ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்ப கருவியாகவும் மாறுகிறது.

கணினியின் முக்கிய பகுதிகளை புரிந்து கொள்வது கணினி அறிவின் அடிப்படை ஆகும். இதன்படி மாணவர்கள் அனைவருக்கும் கணினியின் பகுதிகள் பற்றிய இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *